சனி, அக்டோபர் 08, 2011

துமாமாவை மன்னித்த மாநபி (ஸல்) அவர்கள்.



وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ


107. (முஹம்மதே!) அகிலத்தாருக்கு 281  அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம். 187


(டென்மார்க் பத்திரிகை ஒன்றில் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிச் சித்திரம் வரைந்து பத்திரிகையில் வெளியிட்ட போது எழுதிய கட்டுரை)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மாற்று மதத்து எதிரிகள் தங்களிடம் வசமாக மாட்டிக் கொள்ளும் பொழுது சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொள்பவர்களே இன்று உலகில் மிகைத்திருப்பதை காண்கிறோம்.

ஆனால் அண்ணல் நபி(ஸல்)அவர்களிடம் மாட்டிக்கொண்ட இஸ்லாத்தின் பரம எதிரியாகிய துமாமா அவர்களிடம் அண்ணல் நபி(ஸல்)அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது ஒன்றே உலகம் முடியும் காலம் எவனும் தன்னுடைய வாழ் நாளில் தனது கைகளால் அண்ணல் அவர்களை கேலிச் சித்திரம் வரைய முன் வரவே மாட்டான்.

துமாமா அவர்கள் யமாமா பிரதேசத்தைச் சேர்ந்தவர் மதீனாவிலிருந்து வியாபாரம் நிமித்தம் அல்லது சொந்த அலுவல் நிமித்தம் யமாமா வழியாகவும் இன்னும் யமாமாவிலிருந்து சற்று தொலைவில் வேறு வழியாகவும் பயணிக்கக்கூடிய முஸ்லிம்களை கொலை செய்வதும், அவர்களது பொருட்களை சூறையாடுவதுமே அவரது வாடிக்கையாக இருந்து வந்தது அந்தளவு இஸ்லாத்தின் மீது பகையுணர்வு கொண்டவராக இருந்தார்.

இவர் ஒருநாள் மதீனாவிலிருந்து சற்று தொலைவில் பயணிக்கும் போது முஸ்லிம்களால் காணப்பட்டு மதீனாவுக்குள் பிடித்துக் கொண்டுவரப்பட்டு மஸ்ஜிதுன் நபவி பள்ளியில் கட்டப்பட்டு அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு தகவல் அனுப்பப் படுகிறது.

அண்ணல் நபி  (ஸல்) அவர்கள்  துமாமாவின் அருகில் வந்து துமாமாவே இப்பொழுது உம்முடைய முடிவு என்ன ? என்று கேட்கிறார்கள்.
 
அதற்கவர்.
  • நீங்கள் விரும்பினால் என்னை கொலை செய்து விடலாம், காரணம் அதற்கு நான் முற்றிலும் தகுதியானவனே! அந்தளவுக்கு முஸ்லிம்களை நான் கொலை செய்திருக்கிறேன்.
  • நீங்கள் விரும்பினால் பிணைத் தொகையை பெற்றுக்கொண்டு என்னை விட்டு விடலாம் அந்தளவுக்கு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை (வியாபாரப் பொருட்களை) சூறையாடவும் செய்திருக்கிறேன்
  • நீங்கள் விரும்பினால் என்னை மண்ணித்து விடலாம் அவ்வாறு மண்ணித்து விட்டால் என்னை ஒரு சிறந்த மனிதராக நீங்கள் காணலாம். என்று அடக்கமாக கோரிக்கை வைக்கிறார்.  

இறைத்தூதர் என்பதற்கு சிறந்த சான்று 
கொலை செய்து விடுவதற்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என்பதை அவரே ஒத்துக் கொள்கிறார் குற்றம் அவர் மூலமே நிரூபிக்கப்பட்டும் விடுகிறது அதனால் கொலைக்குக் கொலை எனும் ரீதியில் அவரை கொலை செய்ய உத்தரவிட்டிருக்கலாம். அல்லது பிணைத் தொகையை பெற்றுக் கொண்டாவது விடுவித்திருக்கலாம் காரணம் அப்பொழுது முஸ்லீம்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர்பிணைத் தொகைத் தருவதாக அவரே ஒத்துக்கொண்டார். மண்ணித்து விட்டு விட்டால் சிறந்த மனிதராக வாழ்வேன் என்றுக் கூறிய அவரது கோரிக்கையை புறக்கணித்திருக்கலாம் காரணம் விடுவித்தப் பிறகு சொன்ன மாதிரி சிறந்த மனிதனாக வாழ்வாரா ? என்பது உறுதியாக கூற முடியாது.

ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் வழிகாட்டியாக வரவில்லை அனைத்து சமுதாய மக்களுக்கும் வழிக்காட்டியாக வந்தவர்கள் என்பதால் கொலை செய்வதையோ, பிணைத் தொகையைப் பெற்றுக்கொள்வதையோ தவிர்த்துவிட்டு துமாமா அவர்களது மூன்றாவது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நல்ல மனிதராக வாழ வழி விடுகிறார்கள். (முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.21: 107.  

அவரது கட்டுகள் அவிழ்த்து விடப்படுகிறது அண்ணல் அவர்கள் உண்மையிலேயே உலகத்தாருக்கு அருட்கொடையாக இறைவனால் அனுப்பபட்ட இறைத்தூதர் தான் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்ட துமாமா அவர்கள் அவ்விடத்தில் உளூ ( உடல் சுத்தம் ) செய்து விட்டு அண்ணல் அவர்களுடைய கரங்களின் மீது தனது கரங்களை வைத்து ஏகத்துவத்தை மொழிந்து முஸ்லிமாகி விடுகிறார்.

நான் இதற்கு முன் உங்களை வெறுத்ததுப் போன்று உலகில் எவரையும் வெறுத்ததில்லை,

இன்று உங்களை விட விருப்பத்திற்குரியவர் உலகில் இனி எவரும் எனக்கில்லை என்றுக் கூறி அண்ணல் அவர்களை ஆரத் தழுவிக் கொண்டார் துமாமா (ரலி) அவர்கள்.


தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்து தனது குடும்பத்தவர்கள் அனைவரையும் இஸ்லாத்திற்குள் இணைத்து விடுகிறார். 
குற்றம் சாட்டப்பட்டு எதிரியால் குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டு கயிறுகளால் பிணைத்துக் கட்டப்பட்டு நிற்கும் ஒருவர் இஸ்லாத்தின் எதிரியாகவும் மாற்று மதத்தவராகவும் இருந்தும் கூட என்னை மண்ணித்து விட்டால் சிறந்த மனிதராக வாழ்வேன் என்றுக் கூறிய உறுதி மொழியை ஏற்று அவரது குற்றங்களை மண்ணித்து அவரது கட்டுகளை அவிழ்த்து விட்டு விடும் படி உத்தரவிட்டதன் மூலம் அகிலத்தாருக்கு அருட்கொடையாக இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா ?   

அவர் தன்னை மண்ணித்து விடும்படி வைத்த மூன்றாவது கோரிக்கையில் சிறந்த மனிதராக வாழ்வேன் என்று மட்டுமேக் கூறினார் மாறாக அவிழ்த்து விடுங்கள் முஸ்லிமாகி விடுகிறேன் என்றுக் கூறவில்லை. 

இஸ்லாம் வாளால் பரவியது எனும் நச்சுக் கருத்துகளை விதைக்கும் மேற்கத்தியர்கள் முதல் இந்தியாவின் பாஷிச சிந்தனை வாதிகளும் தலைப்பாகையில் குண்டைக் கட்டி கேலிச் சித்திரம் வரைந்த டேனீஷ்கள் வரை மேற்கானும் துமாமா(ரலி) அவர்களுடைய வரலாற்றைப் படித்து தெளிவுபெற கடமைப் பட்டுள்ளனர்.

இஸ்லாத்திற்குள் கட்டாயப்படுத்தி எவரையும் உள்ளே நுழைவிப்பதை இஸ்லாம் ஒருக்காலும் அனுமதிக்கவில்லை இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிரிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். 2:256.

மேற்கானும் திருமறை வசனம் மூலம் இஸ்லாத்தை புரிந்துகொண்டு இஸ்லாத்திற்குள் வருவதை மட்டுமே இஸ்லாம் அங்கீகரிக்கிறது.

இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் நற்பண்புகளையும்அவர்கள் கொண்டு வந்த இறைமார்க்கத்தையும் புரிந்துகொள்ளாமல் இருந்தவரை முஸ்லிம்களை கொன்றொழிப்பதையும் அவர்களது பொருளாதாரத்தை சூறையாடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்த துமாமா(ரலி) அவர்கள் அண்ணல் அவர்களுடைய மண்ணிக்கும் மனப்பான்மையை நேரில் பார்த்தப்பின் இதற்கு முன்பு தாம் தவறான சிந்தனையில் இருந்ததை உணர்ந்துகொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதுடன் தனது குடும்பாத்தாரையம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளச் செய்து இறைநம்பிக்கையாளர்களின் வரிசையில் இணைந்து கொண்டு ரலியல்லாஹூ அன்ஹூ என்கிற இறைப் பொறுத்தத்திற்குரிய பட்டத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள் 5:119. . . அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்'' என்று அல்லாஹ் கூறுவான்.

அண்ணல் அவர்களின் முழு சரித்திரத்தையம் படிக்க வில்லை என்றாலும் இந்த ஒரு சம்பவத்தையாவது கேலிச் சித்திரம் வரைந்தவர்கள் படித்திருந்தால் தலையில் குண்டைக் கட்டி சித்திரம் வரைந்திருப்பார்களா

ஹதீஸ் இடம்பெற்ற நூல்: அபூதாவூத், அறிவிப்பாளர்: அபூஹூரைiரா (ரலி)அவர்கள்.




 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்...
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்